சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் பேசில் பிரிட்ஜ், வியாசர்பாடி, ஜீவா, கொரட்டூர், பட்டறைவாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, இந்து கல்லூரி, திருமுல்லைவாயில், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பட்டாபிராம், திருவள்ளூர், கடம்பத்தூர், செஞ்சி, பானம்பாக்கம், திருவாலங்காடு, புளியமங்கலம், அரக்கோணம், சித்தேரி, மணவூர் உட்பட 28 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது. இந்த ரயில் தளத்தின் வழியாக மின்சார ரயில் மற்றும் சரக்கு ரயில் என தினமும் 400-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதனால் இந்த மார்க்கம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. மேற்கண்ட ரயில் நிலையங்களை ஒட்டி ரயில்வே கேட்டுக்களும், நடை மேம்பாலங்களும் உள்ளது. ஆனால் இந்த நடை மேம்பாலங்களை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் நிலையங்களின் அருகே தண்டவாளத்தை கடந்து கேட் வழியாக செல்கின்றனர். அப்போது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 274 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே காவல் அதிகாரிகள் கூறியதாவது, ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காமல் நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மூடிய கேட் வழியாக செல்வதையும், கைப்பேசியில் பேசியபடி தண்டவாளத்தை கடப்பதையும், படிக்கட்டில் தொங்கியபடி ரயில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இதனை  கடைபிடித்தால் உயிர் பலியை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.