மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் கடும் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நாளை (திங்கட்கிழமை) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இன்று இஸ்லாமாபாத் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1979-ஆம் ஆண்டு ஈரானிய புரட்சிக்குப் பிறகு, இவ்விரு நாடுகளும் உயர்மட்ட அளவில் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறை என்பதால், ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் இப்போது பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே 10 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, இந்த அமைதி முயற்சிக்கு வலுசேர்த்துள்ளது. பல ஆண்டுகாலப் பகை மறந்து அமெரிக்காவும் ஈரானும் கைகோர்க்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.