அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தம், தற்போது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நிரந்தரப் போர் நிறுத்தத்திற்காக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா, ஈரானிய துறைமுகங்கள் மீது கடும் கடற்படை முற்றுகையை (Naval Blockade) அமல்படுத்தியுள்ளது.
ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் இந்த முற்றுகை நீடிக்கும் என்று அறிவித்துள்ள அதிபர் டிரம்ப், “ஈரான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவில்லை என்றால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்படும்” எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தைச் சீராக அனுமதிப்பது போன்ற கோரிக்கைகளில் இரு நாடுகளும் பிடிவாதமாக இருப்பதால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
