ஆழ்கடலுக்கு அடியில் இன்னும் மனிதனால் கண்டுபிடிக்க முடியாத ஆயிரக்கணக்கான அதிசயங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அப்படி ஒரு அதிசயம் தான் தற்போது அயர்லாந்தின் ஸ்லிகோ கவுண்டி கடற்கரையில் அரங்கேறியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை, அந்தப் பகுதி மக்கள் கடற்கரையில் 2 மீட்டர் நீளமுள்ள ஒரு இறந்த சுறாவைக் கண்டு வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

முதலில் அது சாதாரண ‘பாஸ்கிங் ஷார்க்’ என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால், ஆய்வுக்குப் பிறகுதான் அது உலகையே வியப்பில் ஆழ்த்தும் ‘கிரீன்லாந்து ஷார்க்’ என்பது தெரியவந்தது. இந்த வகை சுறாக்கள் உலகின் மிக நீண்ட காலம் வாழும் முதுகெலும்புள்ள உயிரினங்களில் ஒன்றாகும்.

இவை சுமார் 150 வயதை எட்டிய பிறகே இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன என்பதும், இவற்றின் கர்ப்ப காலம் 8 முதல் 18 ஆண்டுகள் வரை இருக்கும் என்பதும் அறிவியலாளர்களையே அதிர வைக்கும் உண்மைகள். அயர்லாந்து வரலாற்றிலேயே இந்தக் கடற்கரையில் இத்தகைய அரிய வகை சுறா கண்டெடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

4 முதல் 6 மீட்டர் வரை வளரக்கூடிய இந்த ராட்சத சுறாக்களைப் பற்றி மேலும் ஆய்வு செய்ய, அதன் உடல் பாகங்கள் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக ஆழ்கடலில் மறைந்திருந்த ஒரு ரகசியம் இப்போது கரை ஒதுங்கியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.