மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் புதன்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த ஒரு கோர விபத்து அனைவரையும் உலுக்கியுள்ளது. தங்கள் நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அதிவேக மின்சாரக் காரில் சென்ற மூன்று நண்பர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினர். சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய இந்த கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மற்றொரு இளைஞர் உயிருக்குப் போராடி வருகிறார்.
கடந்த புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு பிறந்தநாள் கொண்டாட்டக் குதூகலத்துடன் சென்ற அந்த மூன்று இளைஞர்களின் பயணம், சில நொடிகளில் பயங்கரமாக மாறியது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் படக்காட்சிகளைப் பார்ப்பவர்களின் ரத்தமே உறைந்துபோகும் அளவுக்கு விபத்து கொடூரமாகியுள்ளது.
View this post on Instagram
சிசிடிவி காட்சிகளின்படி, கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார் திடீரென தாறுமாறாக ஓடியது. முதலில் சாலையோர நடைபாதையில் மோதிய கார், பின்னர் காற்றில் பறந்து அருகில் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அந்தரத்தில் கவிழ்ந்து சுக்குநூறாக நொறுங்கியது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல்துறைக்கும் அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த பௌமிக் அமோல் லாரோகர் மற்றும் சாகர் மெல்வானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்ற மூன்றாவது நண்பரான மிகிர் ஆனந்த் பெஹார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் காரில் சிக்கியவர்களை மீட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. படுகாயமடைந்த நபர் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, காரின் அதிவேகமும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததுமே விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
