கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக பலதரப்பட்ட விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜக துணைத் தலைவர் குஷ்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

மணிப்பூர் கலவரத்தையும், கரூர் சம்பவத்தையும் ஒப்பிட முடியாது எனக் கூறிய அவர், மணிப்பூர் சம்பவத்திற்கு தானே தலை குனிவதாக உருக்கமாகத் தெரிவித்தார். ஆனால், கரூர் சம்பவத்தை அதனுடன் ஒப்பிடுவது தவறு எனவும் வலியுறுத்தினார்.

கரூர் சம்பவம் குறித்து மேலும் பேசிய குஷ்பு, இதுபோன்ற துயரங்கள் அருகில் நடந்தாலே மனது பதறும் எனக் குறிப்பிட்டார். விஜய்யின் பிரசாரத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து பல கேள்விகள் எழுவதாகவும், ஆனால் முதலமைச்சர் இதுபோன்ற கேள்விகளுக்கு “ம்யூட் மோட்”க்கு சென்றுவிடுவதாகவும் கிண்டலாக விமர்சித்தார்.

மணிப்பூர் மற்றும் கரூர் சம்பவங்கள் வெவ்வேறு பின்னணியைக் கொண்டவை என்பதை வலியுறுத்திய குஷ்பு, இவற்றை ஒரே தட்டில் வைத்து எடைபோட முடியாது எனத் தெளிவாகக் கூறினார்.