தன் குழந்தைக்கு பிரீ-ஸ்கூல் எனப்படும் எல்.கே.ஜி/யுகேஜி-க்கு முந்தைய வகுப்பின் முதல் நாள் என்பதால், ஒரு இந்திய ஊழியரை அவருடைய வெளிநாட்டு மேலாளர் கட்டாயப்படுத்தி விடுப்பு எடுக்கச் சொன்ன சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் “இன்று ஏன் வேலை செய்கிறாய்?” என்று கேட்ட அந்த மேலாளர், குழந்தையைப் பள்ளியில் விடும் முக்கியமான தருணத்தில் அவனுடன் இருக்க வேண்டும் எனக் கூறி அந்த ஊழியரை லீவ் எடுக்க வைத்துள்ளார். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையேயான சமநிலையை மதிக்கக் கூடிய இந்த மேலாளரின் மனிதநேயமிக்க அணுகுமுறை, சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வைரலாகி வருகிறது.

“>

இந்தச் சம்பவம் குறித்து இணையவாசிகள் தங்களின் கருத்துக்களையும், கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். பல இந்திய ஊழியர்கள் தங்களுக்கு வெளிநாட்டு மேலாளர்களிடம் கிடைத்த இதுபோன்ற நல்ல அனுபவங்களை ஒப்பிட்டுப் பேசியுள்ளனர்.

அதே வேளையில், பெரும்பாலான இந்திய மேலாளர்களுக்கு ஊழியர்கள் மீதான இத்தகைய புரிதலும், பரிவும் இன்னும் வரவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளனர். தன் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி தராமல், ஆன்லைனில் இருக்கிறதா என்று மட்டுமே பார்த்த இந்திய மேலாளர்களின் கடுமையான போக்கையும் ஊழியர்கள் சிலர் ஒப்பிட்டுப் பதிவிட்டு, பணியிடங்களில் மனிதநேயம் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.