கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக இடுக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாணவிக்கு அழகான குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், உள்ளூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி மைனர் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவியின் கர்ப்பத்திற்குக் காரணமானவர் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பள்ளி மாணவர் என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்குட்பட்ட மைனர் என்பதால், சம்பந்தப்பட்ட மாணவர் மீது போக்சோ (POCSO) சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அந்த மாணவரைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
