வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கரூர் நெரிசல் சம்பவத்தில் நீதிபதிகள் கூறுவது மெய்யானது என வலியுறுத்தினார். கள்ளக்குறிச்சி சம்பவத்தின் சூழல் வேறு, கரூரில் 41 பேர் உயிரிழந்தது சாதாரணமல்ல எனக் குறிப்பிட்ட அவர், நீதிபதியின் கருத்துகள் உண்மை அடிப்படையிலானவை என்றார்.

தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு, தேவையான சூழல் ஏற்பட்டால் கண்டிப்பாக கைது செய்வோம், ஆனால் அனாவசியமாக யாரையும் காவல்துறை கைது செய்யாது, ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெளிவுபடுத்தினார். ஒரு கட்சித் தலைவர் தனது கட்சி நலனுக்காகப் பேசுவது இயல்பு எனவும் சுட்டிக்காட்டினார்.

கரூர் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை யாரும் குறை சொல்லவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறினார். அரசியல் கட்சித் தலைவர்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனப் பேசுவது வழக்கம்.

திமுக யாரையும் முடக்கும் நிலை இல்லை, அதேநேரம் எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட முடியாது எனவும் உறுதியாகத் தெரிவித்தார். கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடக்கும் நிலையில், அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் வலியுறுத்தினார்.