எகிப்தின் அஸ்யூத் மாகாணத்தில் உள்ள கார்ப் பனி பக்ர் கிராமத்தில், ஹாஜ் ரமலான் என்ற பிரபல பாம்பு பிடிப்பாளர், கோப்ராவை எவ்வித கருவியும் இன்றி, சத்தம் போட்டு அதன்மீது தாக்குதல் தொடுத்து, மயக்கமடையச் செய்துப் பிடிக்கும் காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி இணையவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

கிராமத்தில் ஒரு பேரீச்சம்பழ மரத்தின் அடியில் இருந்த இரண்டு பெரிய கோப்ரா பாம்புகளைப் பிடிப்பதற்காகப் பீதியடைந்த கிராம மக்கள், ஹாஜ் ரமலானை உதவிக்கு அழைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த காணொலி, மூன்று ஆண்டுகளுக்கு முந்தையது எனச் sabq.org என்ற செய்தி இணையதளத்தில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

வைரலாகும் காணொலியில், ஹாஜ் ரமலான் தடிமனான கம்பளியாலான அங்கி மற்றும் காலணிகள் அணிந்து கோப்ராவை நெருங்கும்போது, அவர் தடிமனான குச்சியால் பாம்பைத் தடவிவிட்டு, திடீரென அதன் மீது பலமாகச் சத்தம் போடுகிறார். ரமலானின் சத்தம் கேட்டவுடன், படம் எடுத்தபடி தாக்குவதற்குத் தயாராக இருந்த கோப்ரா, திடீரெனச் சோர்ந்துபோய் மயக்கமடைந்த நிலையில் தரையில் படுத்துவிடுகிறது.

இந்த திகிலூட்டும் காட்சியை மூச்சுவிடாமல் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள், இந்தக் பாம்பு பிடிப்பாளரின் செயலைக் கண்டு வியப்படைந்தனர். இறுதியில், ஒரு கிராமவாசியின் உதவியுடன், ஹாஜ் ரமலான் இரண்டு கோப்ராக்களையும் பாதுகாப்பாக ஒரு சாக்குப்பையில் அடைத்துச் சென்றுவிடுகிறார். இந்தத் தனித்துவமான திறமையைப் பார்த்த இணையவாசிகள் பலர், இதை ‘பாம்புகளுடன் பேசும் கலை’ என்றும், சிலர் இது ‘அனுபவத்தின் விளைவு’ என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.