உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், ஒரு இளம்பெண் காணாமல் போன விவகாரத்தில் நடந்த தில்லுமுல்லு வேலைகள் அந்த ஊரையே பீதியில் ஆழ்த்தியுள்ளது. ரீனா என்ற 20 வயது இளம்பெண் திடீரென மாயமான நிலையில், அவரது அறையைச் சோதித்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
ரீனாவின் படுக்கையில் 5 அடி நீளமுள்ள பாம்பு சட்டை (Snake skin), குங்குமம், கருப்பு கயிறு மற்றும் உடைந்த வளையல்கள் கிடந்துள்ளன. இதைப் பார்த்த ஊர் மக்கள், “ரீனா பாம்பாக மாறி எங்கோ சென்றுவிட்டார்” என வதந்திகளைக் கிளப்ப, அந்தப் பகுதியே பயத்தில் உறைந்தது.
ஆனால், போலீசாரோ இது காதலுக்காகப் போடப்பட்ட நாடகம் எனச் சந்தேகித்தனர். அவர்கள் கணித்தது போலவே, மாயமான ரீனா பிப்ரவரி 13 அன்று இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஷியாம் என்ற தனது காதலனுடன் இருக்கும் அவர், “வீட்டில் பார்த்த மாப்பிள்ளையைத் தவிர்க்கவே நாங்கள் இருவரும் ஓடி வந்து திருமணம் செய்துகொண்டோம்.
எங்களைத் தேடக் கூடாது என்பதற்காகவும், குடும்பத்தினரை திசைதிருப்பவும் தான் சினிமா பாணியில் பாம்பு சட்டையை மெத்தையில் போட்டுவிட்டு வந்தோம்” என உண்மையை உடைத்தார். நிஜ நாகினி என நம்பி பயந்து கிடந்த ஊர் மக்களுக்கு, இது வெறும் காதல் நாடகம் எனத் தெரிந்ததும் தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
