உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், ஃபேர்வெல் பார்ட்டி முடிந்து வீடு திரும்பிய பிளஸ் 2 மாணவன் ஓட்டி வந்த கார் கட்டுக்கடங்காமல் பாய்ந்து நடத்திய கோர விபத்தில், 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

21 வயதான கௌரவ் சிங் என்ற அந்த மாணவன், தனது நண்பருடன் காரில் அதிவேகமாக வந்தபோது, திடீரென நிலைதடுமாறி சாலையில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள், இ-ரிக்‌ஷா மற்றும் ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தினான்.

இந்த கோர விபத்தில் சாலையில் நடந்து சென்ற மீனா தேவி, அவரது மகள் சாதனா மற்றும் 6 வயது பேரக்குழந்தை தீக்ஷாந்த் ஆகியோர் காரில் சிக்கித் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த சிறுவன் தீக்ஷாந்த், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். விபத்து நடந்தவுடன் காரை அங்கேயே போட்டுவிட்டு அந்த மாணவனும் நண்பரும் தப்பியோடிய நிலையில், போலீசார் தற்போது அந்த மாணவனைக் கைது செய்து காரைப் பறிமுதல் செய்துள்ளனர்.

பார்ட்டி முடிந்து போதையில் கார் ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பார்ப்பவர்களைக் கலங்க வைத்துள்ளது.