மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கோச்சிங் கிளாஸ் முடித்துவிட்டு அக்காவோடு வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது மாடு ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முரார் பகுதியில் உள்ள சிவஹரே காலனியில் கோவிந்த் என்ற சிறுவன் தனது சகோதரியுடன் நடந்து சென்றபோது, தெருவில் நின்றிருந்த மாடு ஒன்று திடீரென பாய்ந்து வந்து சிறுவனைத் தாக்கியது.

சிறுவன் தப்பிக்க ஓடியும் விடாமல் துரத்திய அந்த மாடு, தனது கொம்பால் முட்டியும் காலால் மிதித்தும் சிறுவனைச் சிதைத்தது. தன் கண் முன்னே தம்பி உயிருக்குப்போராடுவதைக் கண்டு அலறிய அந்தச் சிறுமி, ஓடிச் சென்று அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தாள். மக்கள் ஓடி வந்து தடியால் அடித்து மாட்டை விரட்டும் வரை அந்த வாயில்லா ஜீவன் சிறுவனை விடாமல் துவம்சம் செய்தது.

ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சிறுவன் கோவிந்துக்குத் தலையில் மட்டும் 25 தையல்கள் போடப்பட்டு, தற்போது ஐசியூ-வில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

ஊரெங்கும் சுற்றித் திரியும் ஆவாரா மாடுகளையும் நாய்களையும் பிடிக்காமல் மாநகராட்சி வேடிக்கை பார்ப்பதாக மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பார்ப்பவர்களைக் கண்ணீர் விட வைத்துள்ளது.