கர்நாடகாவில் பள்ளி கதவு இடுக்கில் சிக்கி முதலாம் வகுப்பு மாணவனின் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், பள்ளி ஊழியர்கள் அந்த விரல்களை அலட்சியமாக குப்பையில் வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாவேரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் வகுப்பறை கதவை மூடும்போது மாணவனின் விரல்கள் நசுங்கி துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால், காயமடைந்த சிறுவனுக்கு உடனடியாக முறையான முதலுதவி அளித்து துண்டிக்கப்பட்ட விரல்களைப் பாதுகாக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, அங்கிருந்த ஊழியர்கள் அவற்றை குப்பையில் வீசியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபரம் அறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி ஊழியர்களின் இந்த மனிதாபிமானமற்ற மற்றும் பொறுப்பற்ற செயல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் புகாரின் அடிப்படையில், கடமையைச் செய்யத் தவறியது மற்றும் கவனக்குறைவாகச் செயல்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் பள்ளி ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துண்டிக்கப்பட்ட விரல்களை மீண்டும் பொருத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அந்தச் சிறுவனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
