தந்தையின் மரணத்திற்குத் தாய்தான் காரணம் என ஜோதிடர் கூறியதை நம்பி, பெற்ற தாயைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்த மகளைப் போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் துமகூருவில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
துமகூரு மாவட்டம், அனுபவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பலதா (55). இவரது கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களது மகள் சுசித்ரா (33), திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் சுரேஷுடன் வசித்து வந்தார்.
சமீபத்தில் சுசித்ரா ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்துள்ளார். அப்போது அந்த ஜோதிடர், “உன் தந்தையின் மரணத்திற்கு உன் தாய்தான் காரணம். அவர் மாந்திரீக பூஜை செய்து உன் தந்தையைக் கொன்றுவிட்டார்” என்று கூறியுள்ளார். இதை அப்படியே உண்மை என நம்பிய சுசித்ரா, தன் தாயின் மீது கடும் ஆத்திரமடைந்து அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் புஷ்பலதாவின் வீட்டுக்குச் சென்ற சுசித்ரா, ஜோதிடர் சொன்னதைக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சியில், பெற்ற தாய் என்றும் பாராமல் புஷ்பலதாவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி, மூச்சைத் திணறடித்துக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின், தனது தாய் மர்மமான முறையில் படுக்கையிலேயே உயிரிழந்து கிடப்பதாகக் கூறி அக்கம் பக்கத்தினரிடம் சுசித்ரா நாடகமாடியுள்ளார். மேலும், உடலை விரைவாக அடக்கம் செய்ய (இறுதிச்சடங்கு) அவர் அவசரம் காட்டியுள்ளார். இதில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சுசித்ராவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஜோதிடர் கூறியதைக் கேட்டு ஆத்திரத்தில் தாயைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சுசித்ரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் அவரது கணவர் சுரேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தவறான தகவலைக் கூறி கொலையைத் தூண்டிய அந்த ஜோதிடரிடமும் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
