பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெண்களுக்கு ஆதார் அட்டையின் அடிப்படையில் இலவச ஸ்கூட்டர் வழங்க உள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ முற்றிலும் வதந்தி என மத்திய அரசுத் தகவல் முகமை (PIB) எச்சரித்துள்ளது.

சமீபகாலமாக வாட்ஸ்அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், மத்திய அரசின் புதிய நலத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பலரும் இது உண்மையா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தகவல் சரிபார்ப்புப் பிரிவான பிஐபி (PIB Fact Check) ஆய்வு செய்து விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூக வலைதளங்களில் உலவும் அந்த வீடியோ, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு ‘டீப் பேக்’ (Deepfake) வீடியோ ஆகும். மத்திய அரசு பெண்களுக்காக இது போன்ற இலவச ஸ்கூட்டர் வழங்கும் எந்தவொரு திட்டத்தையும் தற்போது அறிவிக்கவில்லை.

அரசியல் தலைவர்களின் குரல் மற்றும் முகத்தைப் போலியாக உருவாக்கி, மக்களைத் தவறாக வழிநடத்த இத்தகைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அரசுத் திட்டங்கள் குறித்த உண்மைத் தன்மையை அறிய, பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ‘MyScheme’-ஐ மட்டுமே அணுக வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் ஆதாரமற்ற வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளைச் சரிபார்க்காமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்றும், தனிநபர் விவரங்களை இத்தகைய தளங்களில் பதிவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இது போன்ற ஏஐ (AI) தொழில்நுட்ப மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.