சவுதி அரேபியா ரியாத்தில் வசித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி, அவரது மனைவி ஸ்ரீதேவி மற்றும் மகன் பிரபாகர் ஆகியோரின் மரணத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், மகன் பிரபாகர் தனது பெற்றோரைத் தாக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியான நிலையில், இதனை அவர்களது உறவினர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
பிரபாகர் படிக்கும் பள்ளியில் பயிலும் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவிக்கும் அவருக்கும் ஏற்பட்ட காதல் விவகாரமே இந்த மொத்தக் கொலைகளுக்கும் காரணம் என்று உறவினர்கள் இந்திய தூதரகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் பெற்றோர் ரவியின் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்ததாகவும், அதன் பின்னரே அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ரவியை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியும், ஸ்ரீதேவியைக் கழுத்தை அறுத்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரபாகரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடியுள்ளதாகக் கூறும் உறவினர்கள், பிரபாகரின் வாட்ஸ்அப் தகவல்களை ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும் என வலியுறுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வரவும், சவுதி அரசு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கவும் வேண்டும் என அவர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
