உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2023 ஐசிசி உலக கோப்பையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 191 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும், இமாம் உல் ஹக் 36 ரன்களும், அப்துல்லா ஷபீக் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீவ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 30.3 ஓவர்களில் 192 ரன்கள் என்ற இலக்கை துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 63 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் உட்பட 86 ரன்கள் எடுத்தார்.  மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (53*) ஆகியோர் சிறப்பாக ஆடினர். மேலும் கே.எல் ராகுல் 19* ரன்களும், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி தலா 16 ரன்களும் எடுத்தனர்.. பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. மேலும் இதன் மூலம் ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்திய அணி (8-0).

1992ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற 8வது வெற்றி இதுவாகும். நவராத்திரிக்குத் தயாராகிக்கொண்டிருந்த நகரத்தை ஒரு நாள் முன்னதாகவே இந்தியாவின் வெற்றி விழாவாக மாற்றியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 1,00,000 பார்வையாளர்களின் மகிழ்ச்சி வெற்றிக் கொண்டாட்டத்தை உணர்த்தியது. மேலும் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் இந்த வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியின் மூலம், இந்தியாவும் ரன்-ரேட்டில் நியூசிலாந்தை முந்தியது மற்றும் 3 போட்டிகளில் 3வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை எட்டியது. அதேசமயம், பாகிஸ்தான் அணி முதல் தோல்விக்கு பின் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில், இந்திய அணி எல்லா வகையிலும்! அகமதாபாத்தில் இன்று அபாரமான செயல்பாட்டின் அடிப்படையில் மாபெரும் வெற்றி. அணிக்கு வாழ்த்துக்கள் மற்றும் எதிர்கால போட்டிகளுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.. இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத் ஸ்டேடியத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது..