சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஒருவர், இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காகத் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவியை நைஸாகப் பேசி முன் இருக்கைக்கு வருமாறு அழைத்துள்ளார். சிறுமி முன் இருக்கையில் அமர்ந்ததும், அந்த ஓட்டுநர் மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறவே, பயந்துபோன அந்த ஓட்டுநர் அக்கம் பக்கத்தினர் பிடித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், மாணவியை ஓடும் ஆட்டோவில் இருந்தே கீழே தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
பலத்த காயமடைந்த மாணவி தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவான அந்த ஆட்டோ ஓட்டுநரை திருவொற்றியூர் போலீஸார் சிசிடிவி (CCTV) காட்சிகளை வைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த இந்தத் துயரம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
