கோவையில் எம்.பி.ஏ. படித்து வந்த மாணவன் ஒருவனுக்கும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக ஏற்பட்ட பழக்கம், இறுதியில் தாய் மற்றும் மகள் இருவரின் உயிரைப் பறித்த கோர சம்பவமாக மாறியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்சயன், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் பழனிசாமி – தனலட்சுமி தம்பதியின் மகளான பூவரசிக்கும் (25) கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நட்பு ரீதியாகத் தொடங்கிய இந்தத் தொடர்பு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்களது செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் பல்லடத்திற்கு நேரில் சென்று பூவரசியைச் சந்தித்த அக்சயன், முதல் சந்திப்பிலேயே தங்களுக்குள் காதல் மலர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். பூவரசி தன் வீட்டின் ஒரே பெண் என்பதால், பெற்றோர் தங்கள் காதலை ஏற்றுக்கொள்வார்கள் என்று அக்சயனிடம்  கூறியுள்ளார். படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், நண்பர்கள் முன்னிலையில் பூவரசிக்கு அக்சயன் ஒரு சிறிய தங்கச் சங்கிலியையும் அணிவித்துள்ளார்.

மகள் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கண்ட அவரது தாயார் தனலட்சுமி, அதுகுறித்து விசாரித்துள்ளார். பூவரசியும் தன் காதலைப் பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், பூவரசியின் பெற்றோர் இந்தக்காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பூவரசியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அக்சயனுடன் பேசுவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்ட அவர், பெற்றோர் எதிர்ப்பதால் நாம் பிரிந்துவிடலாம் என்று கூறியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இதைப் பொறுத்து பார்த்த அக்சயன், அவரை நேரில் சந்தித்துப் பேச முயன்றபோதும் பூவரசி பிடிகொடுக்கவில்லை.

பூவரசி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட அக்சயன், நேரில் சென்று அவரது பெற்றோரிடம் பெண் கேட்க முடிவு செய்துள்ளார். இதற்காகப் பல்லடத்திற்கு வந்து கடந்த மூன்று நாட்களாக ஒரு விடுதியில் தங்கி, பூவரசியின் வீட்டின் முகவரியைக் கண்டுபிடித்துள்ளார்.

கடந்த 10-ஆம் தேதி மாலை பூவரசியின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் அக்சயனைத் திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், “எனக்குக் கிடைக்காத பூவரசி யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற கோர முடிவுக்கு வந்துள்ளார்.

மறுநாள் (11-ஆம் தேதி) காலை 8 மணியளவில் மீண்டும் பூவரசியின் வீட்டிற்கு அக்சயன் சென்றுள்ளார். அங்கு பூவரசியின் தாய் தனலட்சுமி அவரைத் திட்டி வெளியே போகச் சொல்லியுள்ளார். அப்போதும் அக்சயன் தனது எதிர்காலத் திட்டங்களையும், பூவரசியை மகாராணி போலப் பார்த்துக் கொள்வதாகவும் கூறி அவர்களிடம் கெஞ்சியுள்ளார்.

ஆனால், தனலட்சுமி அவரை மிகவும் கேவலமாகப் பேசி விரட்ட முயன்றதால், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அக்சயன் வீட்டில் ஓரமாக இருந்த அரிவாளை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பூவரசியை வெட்டியுள்ளார். இதைக் தடுக்க வந்த தாய் தனலட்சுமியையும் அவர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் நின்ற அக்சயனை மடக்கிப் பிடித்து, கயிற்றால் கைகளைக் கட்டி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சடலங்களைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அக்சயனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.