திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம் பெண் (23). இவர் மதுரவாயல் அடுத்துள்ள நும்பல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே மாங்காடு பகுதியில் கோவூர் நகரில் வசித்து வருபவர் ஈனோக்(29). ஈனோக் அந்த இளம் பெண்ணை காதலிப்பதாக அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அந்த இளம் பெண் காதலை புறக்கணித்து வந்துள்ளார். இருந்தும் ஈனோக் தொடர்ந்து அந்த இளம் பெண்ணை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். வழக்கம்போல அந்த இளம்பெண் வேலை முடித்துவிட்டு சம்பவ நாளன்று நிறுவனத்தின் வெளியே வீட்டிற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஈனோக் அங்கு சென்று அந்தப் பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுத்ததால் இளம்பெண்ணை ஈனோக் அடித்து தாக்கியுள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்து சென்றுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த இளம் பெண் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஈனோக்கை கைது செய்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈனோக்கின் மீது ஏற்கனவே பல வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.