டாட்டு ஆர்ட்டிஸ்ட் ஹரிஹரன் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்தவர். இவர் திருச்சியில் டாட்டூ கடை நடத்தி வந்துள்ளார். இவருடன் ஜெயராமன் என்ற பணியாளரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இணையதளங்களில் வெளியிடும் வீடியோக்களுக்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வந்தனர். சிலர் இவர் இளைய தலைமுறைகளை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாக புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் இவர் நாக்கின் நுனி பகுதியை இரண்டாக வெட்டிவிடும் ஆபரேஷனை வாடிக்கையாளர் ஒருவருக்கு செய்வது போன்று வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இது குறித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி டாட்டூ ஆர்ட்டிஸ்ட் ஹரிஹரன் மற்றும் அவரது பணியாளர் ஜெயராமன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இவரது கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ஹரிகரன் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் அவர் கூறியதாவது, உடல் உறுப்புக்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு முறையான சான்றிதழ்கள் பெற வேண்டும். இதனை சட்ட விதிமீறல் என்று கூறினர். டி.ஐ.ஜி வருண்குமார் அறிவுரையின்படி எனக்கு மனரீதியாக கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. இது மாதிரியான செயல்களை சட்ட முறையான சான்றிதழ்கள் பெற்று செய்ய வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்னைப் போல யாரும் இது மாதிரியான செயல்களில் ஈடுபடாதீர்கள். இனிமேல் இது மாதிரியான எந்தவித சட்ட விரோதமான செயல்களிலும் நான் ஈடுபட மாட்டேன். என்று ஹரிஹரன் தெரிவித்து இருந்தார்.