திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் கடலரசி (24). இவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இளந்தென்றல் (29) என்ற கணவர் உள்ளார். மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளந்தென்றல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடலரசி- இளந்தென்றல் தம்பதியினருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மருத்துவ தம்பதிகள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவரும் வெகு நாட்களாகவே குடும்பத் தகராறில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜனவரி மாதம் 7ஆம் தேதி இரவு டாக்டர் கடலரசி தனது வீட்டில் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
இதனை கண்ட குடும்பத்தினர் டாக்டர் கடலரசியை அருகிலுள்ள வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று கடலரசி பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து ஆம்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் கடலரசியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கடலரசியின் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.