மதுரையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆடு மாடுகள் மேய்க்கும் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. அதாவது காடுகளில் வனத்துறையினர் மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை என்ற கண்டனத்தை முன்வைத்து சீமான் மேய்ச்சலுக்கு வனப்பகுதிகளில் அனுமதி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கான ஆடு மாடுகள் முன்னிலையில் சீமான் பேசினார்‌. அவர் பேசியதாவது, என்னிடம் மட்டும் ஆட்சி அதிகாரம் இருந்தால் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலை அரசு வேலையாக மாற்றுவதோடு ஆடு மற்றும் மாடுகளுக்கும் ஓட்டுரிமை வழங்கப்படும் என்றார். அதன் பிறகு கிராமப்புறங்களில் தற்போது மாடு மேய்க்கும் தொழில் குறைந்து வருகிறது. மாடு மேய்ப்பது என்றால் அவமானம் கிடையாது அது வெகுமானம்.

கண்ணன், இயேசுபிரான், நபிகள் நாயகம் ஆகிய கடவுள்கள் கூட ஆடு மாடு மேய்த்தார்கள். இனி யாரையும் எருமைமாடு என்று திட்டாதீர்கள். பள்ளிகளில் மாணவர்கள் படிக்கவில்லை என்றால் ஆடு, மாடு மேய்க்க தான் லாயக்கு என்று இனிதிட்டி அவமானப்படுத்தாதீர்கள். ஒரு மாணவன் படிக்கவில்லை என்றால் நன்றாக சொல்லிக் கொடுங்கள். இதற்கு பதிலாக அவமானப்படுத்தாதீர்கள் என்றார்.

பிரியாணி என்றால் எச்சில் ஊற சாப்பிடுகிறீர்களே எங்கள் கறி இல்லாமல் எந்த உணவு இருக்கிறது. எலும்பில்லாமல் சுக்காவாக வேண்டும் என கேட்டு பக்காவாக உண்கிறீர்களே. நாங்கள் எதை உண்போம் என்பதை நீங்கள் யோசித்து உள்ளீர்களா. உங்களுக்கு கறி எங்கிருந்து வருகிறது என்று ஆடுகளின் கோரிக்கையாக அவர் கேட்டார். மேலும் ஆடு மாடுகளுக்கு மேய்ச்சல் ‌ நிலத்தை தமிழ்நாடு அரசு மீட்டு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.