விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்ட காலம் பணியாற்றி, அண்மையில் திமுகவில் இணைந்த பி.டி. செல்வகுமாருக்கு அக்கட்சியின் வர்த்தக அணி மாநிலத் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து விலகி திமுகவில் ஐக்கியமான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினத்திற்கு செய்தித் தொடர்பு அணி மாநிலத் துணைத் தலைவர் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாற்றுக்கட்சிகளிலிருந்து அண்மையில் வந்தவர்களுக்கு உடனடியாகப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது, நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்து வரும் உடன்பிறப்புகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை ஈர்க்கும் நோக்கில் திமுக தலைமை இத்தகைய அதிரடி நியமனங்களை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுக்கும், விசுவாசிகளுக்கும் முன்னுரிமை அளிக்காமல், வெளிப்படையான அரசியல் காரணங்களுக்காகப் பதவி வழங்கப்படுவது நியாயமற்றது என திமுகவின் ஒரு தரப்பினர் முணுமுணுத்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் எழுந்துள்ள இந்த உட்பூசல், கட்சித் தலைமைக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.