கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தனக்கு, உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறி அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து லீமா ரோஸ் மார்ட்டின் விலகியுள்ளார். கடந்த 2021 தேர்தலின் போது கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒரே நாளில் 67 கிராமங்களுக்குச் சென்று தான் தேர்தல் பணியாற்றியதைச் சுட்டிக்காட்டிய அவர், சமீபகாலமாகத் தனது உழைப்பு உதாசீனப்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கட்சித் தலைமை மீது ஏற்பட்ட இந்த அதிருப்தி காரணமாக, எட்டு மாதங்கள் காத்திருந்தும் சரியான பதில் கிடைக்காததால் இந்த விலகல் முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

​லீமா ரோஸ் அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. அவர் தனது மகனின் புதிய கட்சியான ‘லட்சிய ஜனநாய கட்சி’யைத் தமிழ்நாட்டில் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் இணைந்து வரும் தேர்தலைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள நிலையில், லீமா ரோஸின் இந்தத் திடீர் விலகல் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.