சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது நகை வாங்குவோரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் மட்டுமே உயர்ந்து காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் திடீரென 1520 ரூபாய் என தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 1680 ரூபாய் வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக இந்தத் திடீர் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த அதிரடி விலை உயர்வால் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14,790 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 18,320 ரூபாய் என்ற மலைக்க வைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.

காலையில் ஒரு விலையும் மாலையில் ஒரு விலையுமாகத் தங்கம் விலை ஏறுமுகத்தில் செல்வது சாமானிய மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில் பலரும் நகைக்கடைகளை நோக்கிச் செல்வதைக் காண முடிகிறது.