இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்றாலே அது வெறும் கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல, ரசிகர்களுக்கு அது ஒரு உணர்ச்சிப் போராட்டம்! வரும் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்த மெகா மேட்சுக்காக, இப்போதே விமானக் கட்டணங்கள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன. பொதுவாகச் சென்னையிலிருந்து கொழும்பு செல்ல ₹9,000 முதல் ₹15,000 வரை மட்டுமே செலவாகும் நிலையில், தற்போது இந்த வார இறுதிப் பயணத்திற்காகத் டிக்கெட் விலை ₹43,000 முதல் ₹55,000 வரை எகிறியுள்ளது. பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் பங்கேற்பது உறுதியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, விமான நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது ரசிகர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

​விமானம் மட்டுமல்லாமல் கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் வாடகையும் வழக்கத்தை விட 10 மடங்கு வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு இரவு தங்குவதற்கு ₹1.5 லட்சம் வரை கூட சில ஓட்டல்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதால், நடுத்தர வர்க்க ரசிகர்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். ஆனாலும், “விலை எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை, நேரில் போய் நம்ம டீமை சப்போர்ட் பண்ணுவோம்” எனத் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்தப் போட்டி நடக்கும் அன்று கொழும்பு நகரம் இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களால் நீலமும் பச்சை நிறமுமாகப் போர்க்களம் போலக் காட்சியளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!