வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய நீதிக்கட்சி சார்பில், மதுரை மத்திய தொகுதியில் பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிகளை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக்கட்சி இணைந்து போட்டியிடுகிறது. இந்த கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று ஏசி சண்முகம் கூறும் போது பாஜக சார்பில் ஒரு தொகுதியும் அதிமுக சார்பில் ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது, மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை இயக்கியும் நடித்தும் பிரபலமான சுந்தர்.சி, தற்போது அரசியலில் கால் பதிக்கிறார். அவரது இந்தப் புதிய பிரவேசம் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அவரது நட்சத்திர அந்தஸ்து தேர்தலில் அவருக்குக் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மத்திய தொகுதி, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு முக்கியத் தொகுதியாகும். இந்தப் பகுதியில் அதிமுக மற்றும் புதிய நீதிக்கட்சிக்குத் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. சுந்தர்.சி போட்டியிடுவது இத்தொகுதியில் போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.

திமுக கூட்டணியில் இத்தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், சுந்தர்.சி போன்ற ஒரு பிரபலமான ஆளுமை போட்டியிடுவது திமுகவுக்குச் சவாலாக அமையும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மதுரை மத்திய தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சுந்தர்.சியின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.