ஈராக் நாட்டின் கடல் பகுதியில் அமெரிக்காவிற்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய தற்கொலைப்படை படகுத் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சர்வதேச கடல் எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனத்திற்குச் சொந்தமான ‘சேஃப்சீ விஷ்ணு’ (Safesea Vishnu) என்ற எண்ணெய் கப்பல், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் ஈராக் கடல் எல்லைக்குள் பயணித்துக் கொண்டிருந்தது. ஈராக்கின் கோர்-அல்-சுபைர் (Khor Al-Zubair) துறைமுகம் அருகே இந்தக் கப்பல் வந்தபோது, ஈரானைச் சேர்ந்த தற்கொலைப்படை படகுகள் கப்பலை இலக்கு வைத்து மோதித் தாக்குதல் நடத்தின.
இந்தக் கோரத் தாக்குதலில் கப்பலில் பணியாற்றி வந்த இந்திய மாலுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர், கப்பலில் இருந்த மற்ற 27 மாலுமிகளைப் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்களுக்குத் தேவையான முதலுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவுக்குச் சொந்தமான கப்பல் என்பதால், திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான கப்பல் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கப்பலில் இருந்த எண்ணெய் கசிவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈராக் கடல் எல்லைக்குள் புகுந்து ஈரான் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இந்திய மாலுமியின் உடலை தாயகம் கொண்டு வரவும், மற்ற மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியத் தூதரக அதிகாரிகள் ஈராக் மற்றும் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். மேலும் இந்தத் தாக்குதல் காரணமாக அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
