சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடும் சவாலாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஈரானிய அதிகாரிகளுடன் இந்தியா மேற்கொண்ட தீவிரப் பேச்சுவார்த்தையின் பலனாக, இந்தியக் கொடியிடப்பட்ட எண்ணெய் கப்பல்கள் எந்தவிதத் தடையும் இன்றிச் செல்ல ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தகவலை NDTV செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அனுமதியைத் தொடர்ந்து, இந்தியாவின் 2 பிரம்மாண்ட எண்ணெய் டேங்கர்கள் தற்போது ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்து இந்தியா நோக்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றன. இவை அடுத்த சில நாட்களில் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணத்தைத் தொடங்கியுள்ளதால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில்  சமையல் எரிவாயு (Gas Cylinder) விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பெட்ரோல் மற்றும் டீசல் வரத்து தடையின்றித் தொடர்வதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. எரிசக்தி விநியோகம் சீராக இருப்பதால், நாட்டின் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்தில் ‘ஹார்முஸ் நீரிணை’ மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும்பகுதி இந்த வழியாகவே நடைபெறுகிறது. தற்போதைய இந்த ராஜதந்திர வெற்றி, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.