ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான போரில் அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தீவிரத் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் கென்டக்கியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே வெற்றியின் முடிவு தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும், எனினும் எஞ்சியுள்ள பணிகளை முழுமையாக முடிக்கும் வரை அமெரிக்கப் படைகள் அங்கிருந்து பின்வாங்காது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மறுபுறம், போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், ஈரானின் சட்டபூர்வ உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, எதிர்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மோதல் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதோடு, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற உலகளாவிய பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், “வெற்றி பெற்றுவிட்டோம்” என்ற டிரம்பின் முழக்கம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
