அமெரிக்கா சர்வதேச அளவில் ஒரு பெரிய போர் அல்லது இராஜதந்திர நெருக்கடியில் சிக்கும்போதெல்லாம், கத்தாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சமரசத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

காசா போர் நிறுத்தம், தலிபான்களின் பிடியிலிருந்து அமெரிக்கக் குடிமக்கள் விடுதலை, வெனிசுலா இரகசியப் பேச்சுவார்த்தை மற்றும் சமீபத்திய அமெரிக்க-ஈரான் போர் நெருக்கடி ஆகியவற்றில் கத்தார் நாடு ஆற்றியுள்ள மத்தியஸ்தப் பாத்திரம் குறித்த செய்தி சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் உலகளாவிய பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

கடந்த 2023 முதல் கத்தாரின் பிரதமராகவும், 2016 முதல்வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றி வரும் அல் தானி, மேற்கத்திய நாடுகளுக்கும் ஈரான் போன்ற நாடுகளுக்கும் இடையே ஒரு நம்பகமான தகவல் தொடர்புப் பாதையாகத் திகழ்ந்து வருகிறார்.

குறிப்பாக, 15 மாத காசா போருக்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதும், தலிபான்களின் பிடியிலிருந்து அமெரிக்கர்களை மீட்டதும், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுடன் நிபந்தனைகளை இறுதி செய்ததும் கத்தாரின் கூட்டு முயற்சிகளால்தான் சாத்தியமானது.

ஏமன், லெபனான், சூடான், லிபியாபோன்ற பல்வேறு நாடுகளின் உள்நாட்டு மோதல்களையும், எல்லைப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள கத்தார் நாடு, இன்று உலகிலேயே மிகச் செல்வாக்கு மிக்க இராஜதந்திர மத்தியஸ்த நாடாக உருவெடுத்து ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.