ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரம் தொடர்பாக 14 அம்ச தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஈரானின் மசூத் பெசெஷ்கியான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்த விழாவை நடத்தும் ‘ஹோஸ்ட்’ பெருமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் இந்த விழாவை நடத்துகிறது என்றால், கூட்டம் ஏன் இஸ்லாமாபாத்தில் நடக்காமல் ஜெனிவாவில் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணங்களாக, கடந்த காலப் போரின் போது அமெரிக்கா பாதியில் நிறுத்திய பேச்சுவார்த்தையை அதே ஜெனிவாவிலேயே மீண்டும் தொடங்கி, அமெரிக்காவைத் பணிய வைத்துள்ளோம் என்ற செய்தியை ஈரான் உலகிற்குச் சொல்ல நினைப்பதே ஆகும். மேலும், ஜெனிவா நகரம் உலகளவில் ‘அமைதியின் தலைநகரம்’ என்று அழைக்கப்படுவதும், இஸ்லாமாபாத் நகரில் அமெரிக்க அதிபர்களின் பாதுகாப்பிற்கு இருக்கும் அச்சுறுத்தல்களுமே முக்கியக் காரணங்கள் ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது. பதிலுக்கு ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிடும் மற்றும் அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என உறுதியளிக்கும். இதற்குப் பிரதிபலனாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டு, முடக்கப்பட்ட 300 பில்லியன் டாலர் சொத்துக்களும் விடுவிக்கப்படும். எனினும், இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
