ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே எட்டப்பட்டுள்ள புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த ஒப்பந்தத்திற்குத் தங்கள் நாடு கட்டுப்படாது என்றும், லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் பின்வாங்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, ஈரானின் பினாமி அமைப்புகளை ஒடுக்குதல் மற்றும் நீண்ட தூர ஏவுகணை தயாரிப்புக்குத் தடை விதித்தல் போன்ற இஸ்ரேலின் முக்கிய கோரிக்கைகள் எதையும் அமெரிக்கா சேர்க்காததே இந்த ஆக்ரோஷமான முடிவுக்குக் காரணமாகும்.

இதனால் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் மற்றும் அங்கிருந்து படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனை இஸ்ரேலுக்குப் பெரும் கரக்டரீதியான பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதே நேரத்தில், ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்பதற்கான எந்தவொரு உத்தரவாதமும் இஸ்ரேலுக்கு வழங்கப்படவில்லை. ஏறத்தாழ 12 பில்லியன் டாலர்களைப் போருக்காகச் செலவிட்ட போதிலும், இறுதி நேரத்தில் அமெரிக்கா தங்களைத் தனித்து விட்டதாக நெதன்யாகு அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த ராஜதந்திரத் தோல்வியின் விளைவாக, வரும் நாட்களில் லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக் கூடும் என்றும், இதனால் ஈரான் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.