சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில்: சீனிவாச சேதுபதி (தவெக): 83,365 வாக்குகள், பெரியகருப்பன் (திமுக): 83,364 வாக்குகள் பெற்ற நிலையில்
வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தார். பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி “சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதிக்கு வர வேண்டிய ஒரு தபால் வாக்கு, தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு அந்த வாக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்கு சரியாகச் சேர்க்கப்பட்டிருந்தால், இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றிருப்பர்.
அதன் பிறகு குலுக்கல் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, தேர்தல் ஆணையத்தின் இந்தத் தவற்றைச் சரிசெய்யும் வரை சீனிவாச சேதுபதி சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும்.
சீனிவாச சேதுபதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அதை எதிர்த்து ‘தேர்தல் வழக்கு’ மட்டுமே தாக்கல் செய்ய முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் தனது கடமையைச் செய்யத் தடை விதிக்கக் கூடாது. அவ்வாறு தடை விதிப்பது அந்தத் தொகுதி மக்களின் உரிமையைப் பாதிக்கும் செயல் என்றார்.
தேர்தல் ஆணையம் தரப்பில், தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறினால் என்ன செய்ய வேண்டும் என்று சட்டத்தில் தெளிவான விதிமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள் எல். விக்டோரியா கவுரி மற்றும் செந்தில் குமார் அமர்வு:
“ஒரே ஒரு வாக்காக இருந்தாலும், அது குறித்து வேட்பாளர் எழுப்பிய புகாருக்குப் பதில் அளிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. இதில் நிலவும் தெளிவற்ற நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.
