தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகம் கருதி எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவர் சந்தித்தது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் நேற்று முன்தினம் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவர்களது இல்லத்திற்கே சென்று முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்தச் சந்திப்புகள் குறித்து நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கடும் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் வைகோ ஆகியோரை முதல்வர் விஜய் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், அதன்பிறகு ஒரு அரசியல்வாதியை (சீமான்) அவர் சந்தித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. பரப்புரையில் கடுமையாக விமர்சித்துவிட்டு, பின்னர் ‘தம்பி’ என கட்டிப்பிடிப்பது மக்களுக்குக் குழப்பத்தையே ஏற்படுத்தும்.
View this post on Instagram
தொடர்ந்து பேசிய அவர், “என்னைத் தமிழ்நாட்டில் வாழ விடுங்கள் எனப் பலமுறை மன்றாடியும் யாரும் உதவி செய்யவில்லை. ஆனால், எனக்குத் துரோகம் செய்தவருக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்கள். என்னுடைய எதிரியை ஒருவர் சந்தித்தால், அவரும் எனக்கு எதிரிதான். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்னை வாழ விடாமல் செய்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.
தனது வேதனையைப் பகிர்ந்துகொண்ட விஜயலட்சுமி, “இதுவே எனது கடைசி வீடியோ. இனிமேல் வாழ்வோ, சாவோ நான் கர்நாடகாவிலேயே பார்த்துக்கொள்கிறேன். இதோடு எல்லாரிடமிருந்தும் விலகுகிறேன் என உருக்கமாகத் தெரிவித்து, தமிழகத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். முதல்வர் விஜய்யின் இந்த அரசியல் நகர்வு, சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், விஜயலட்சுமியின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
