தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவை உறுப்பினர்கள் தற்போது பேசி வருகிறார்கள். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சரும் நானும் ஒரே காலேஜில் படித்தவர்கள் தான். ஒரே காலேஜில் படித்திருந்தாலும் அரசை வழிநடத்துவதில் திமுக தான் சீனியர். 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததால் நாங்க தான் சீனியர்ஸ். அந்த வகையில் எங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 

இன்று நானும் முதலமைச்சரும் தான் அவை தலைவராகிய உங்களை கையைப் பிடித்து அழைத்து சென்று இருக்கிறோம். அதேபோன்று நீங்களும் எங்களை சம உரிமையோடு நடத்த வேண்டும் நீங்கள் கோபப்படக்கூடாது நாங்களும் உங்களை கோபப்படும் நடந்து கொள்ள மாட்டோம். மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சம அளவில் பேசுவதற்கு உரிமை வேண்டும் என்றார். மேலும் தமிழ்நாட்டில் எந்த நிகழ்ச்சியிலும் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு சென்று விடாமல் உறுதி படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.