நடிகர் விஜய் நடிப்பில் நாளை வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக, படத்தின் வெளியீடு தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுவதாகத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தணிக்கை வாரியத்தின் பதிலைப் பெற்ற நீதிபதி வழக்கின் தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளார்.
இதனால் திட்டமிட்டபடி நாளை படம் வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகினர் மத்தியிலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியின் பழைய கருத்தை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விஜய்க்கு ஆதரவாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
9 ஆண்டுகளுக்கு முன்பு ‘மெர்சல்’ படத்திற்குச் சிக்கல் ஏற்பட்டபோது, தமிழ் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் அவமதிக்க வேண்டாம் என ராகுல் காந்தி மத்திய அரசுக்கு விடுத்த எச்சரிக்கையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று பாஜக அரசு வேண்டுமென்றே ‘ஜனநாயகன்’ படத்தைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் மீண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அரசியல் மோதல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
