நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத் தணிக்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ள ஆதரவு நிலைப்பாட்டிற்கும், திமுக கூட்டணியின் முடிவுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம், சினிமா வட்டாரத்தைத் தாண்டி தற்போது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடனேயே சான்றிதழ் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகப் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். திரைப்பிரபலங்கள் பலரும் இது குறித்துக் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இது குறித்து இதுவரை மௌனத்தை கலைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு வேண்டுமென்றே தலையிடுவதாகத் தமிழக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
“மத்திய பாஜக அரசு, தங்களுக்கு உட்பட்ட அனைத்துத் துறைகளையும் பயன்படுத்தித் தங்களின் எதிரிகளை ஒடுக்குவதும், அவர்களைத் தங்கள் வழிக்குக் கொண்டு வர முயற்சிப்பதும் உலகறிந்த உண்மை. அந்த வகையில், நடிகர் விஜய்யைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கான ஒரு முயற்சியாகவே தணிக்கைக்குழு மூலம் இந்தத் தடையை பாஜக மேற்கொள்கிறது.
இதன் அடிப்படையில்தான் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவாகவும், பாஜகவை விமர்சித்தும் கருத்துத் தெரிவித்து வருகிறது. காங்கிரஸின் இந்த ஆதரவு நிலைப்பாட்டிற்கும், எங்களுடைய கூட்டணிக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அகில இந்திய காங்கிரஸ் தலைவரோ அல்லது மாநிலத் தலைவரோ அதிகாரப்பூர்வமாக என்ன சொல்கிறார்களோ, அது குறித்து மட்டுமே திமுக கருத்துச் சொல்ல முடியும்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.
