நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட விவகாரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக சினிமாக்களை தணிக்கை செய்வதை தமிழக மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகள், அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலையைத் தூண்டியுள்ளது. அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானதுதான். ஆனால், அதற்காக ஒரு கலைஞரின் படைப்புகளைக் குறிவைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசியல் சண்டைகளில் கலை மற்றும் பொழுதுபோக்குத் துறையைப் பகடைக்காயாகப் பயன்படுத்தக் கூடாது. அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களைத் தணிக்கை செய்வதை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

மத்திய அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் அழுத்தம் காரணமாகவே விஜய்யின் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது அந்தத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். கலையிலிருந்து அரசியலைத் தள்ளி வைத்துவிட்டு, படைப்பு சுதந்திரத்தை மதிக்கப் பழக வேண்டும்.

பிரதமர் மோடி அவர்களே, உங்கள் சக்தியை நிரூபிக்க வேண்டுமானால் அதை ‘நடிகர்’ விஜய்க்கு எதிராகக் காட்டாமல், ‘அரசியல்வாதி’ விஜய்க்கு எதிராகக் காட்டுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழகத்தில் ஒருபோதும் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு கிரிஷ் சோடங்கர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.