சென்னை மாவட்டத்தில் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் வரும் ஜூலை 30ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு 10 மணி வரை மேற்குறிப்பிட்ட 7 மண்டலங்களுக்கும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதாவது செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2000 மில்லி மீட்டர் விட்டமுடைய இரண்டாவது வரிசை பிரதான குடிநீர் குழாய் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் முன்னேற்பாடாக தங்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் அவசர தேவைகளுக்கு லாரி மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள குடிநீர் வாரியத்தின் இணையதள முகவரியினை பயன்படுத்தியும் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் மற்ற பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெருநடைகளுக்கு லாரி மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் என எந்த தடையும் இன்றி வழக்கம் போல சீரான முறையில் குடிநீர் விநியோகம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
