பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோ நிலையத்தில் இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒருபக்கம் உள்ள பெண் கன்னடத்தில் பேச வேண்டும் என வலியுறுத்த, மறுபக்கம் உள்ள பெண் ஹிந்தியிலேயே பதிலடி கொடுக்கிறார். “ஹிந்தி பேசு” என கூறும் பெண், எதிர்பாராத வகையில், “நீ சிஎம் ஆ?” என்றும், “போயிடு” என்றும் கடுமையான வார்த்தைகளில் பேசுகிறார்.

 

வாக்குவாதம் மேலும் சிக்கலாகி, புடவை அணிந்த பெண்ணை நோக்கி அவமதிப்பான வார்த்தைகளை அந்த பெண் பயன்படுத்துகிறார். “சித்தராமையா ஓட மகளா நீ?” என கேட்கும் காட்சி வீடியோவில் தெளிவாகக் கேட்கப்படுகிறது. இந்த சம்பவம் மெட்ரோ நிலையத்தில் நெறிமுறைகளை மீறி நடந்ததாகவும், மற்ற பயணிகள் திகைத்து நிற்கும் வகையிலும் காணப்பட்டது.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, பல்வேறு வகையான விமர்சனங்களையும் கருத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது. “ஒவ்வொரு நாளும் கன்னடத்துக்காக சண்டை வரும், ஏன் இவ்வளவு சகிப்புத்தன்மையில்லாமலாகிவிட்டது?” என ஒருவர் ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இன்னொரு பயனர் “இது உண்மையிலேயே மொழி சண்டைக்கு ஏற்ற சம்பவம் இல்ல, எளிமையாகவே புறக்கணிக்கலாம்” என விமர்சித்துள்ளார். மொழி அடையாளம் சார்ந்த இந்தவகைச் சண்டைகள் மீண்டும் கலவரத்திற்கு வழிவகுக்கும் என பலர் கவலை தெரிவிக்கின்றனர்.