ஐதராபாத்தில் உள்ள சின்ன அனுமுலா கிராமத்தைச் சேர்ந்த சத்யபிரசாத் மற்றும் ராமலிங்கம்மா தம்பதியரின் மகன் கணேஷ் என்பவர் காய்ச்சல் காரணமாக மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு கணேஷுக்கு ஒரு மாத்திரையை வழங்கியுள்ளார்.
அந்த மாத்திரையை உட்கொள்ள குடிநீர் தேடிச் சென்ற தாய் ராமலிங்கம்மா மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் இயந்திரத்தில் தண்ணீர் இல்லாததைக் கண்டு அருகில் இருந்த ஆய்வகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரு திரவத்தை தண்ணீர் என்று தவறாகக் கருதி பாட்டிலில் பிடித்து வந்து மகனிடம் கொடுத்துள்ளார்.
அந்த பாட்டிலில் இருந்தது குடிநீர் அல்லாமல் ஃபார்மால்டிஹைட் எனப்படும் ஆபத்தான வேதிப்பொருள் என்பதை அறியாத கணேஷ் அதனை இரண்டு மிடறு குடித்த சில நொடிகளிலேயே மயங்கி விழுந்து பரிசோதனை கூடத்திற்கு அருகிலேயே உயிரிழந்தார்.
ஆய்வகத்திற்கு வெளியே ஆபத்தான வேதிப்பொருட்களை வைத்திருந்தது மற்றும் குடிநீர் வசதி செய்யத் தவறியதே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே தனது மகனின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
