தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்(53)- ராமாயி(46) தம்பதியினர். இவர்கள் இருவரும் சேர்ந்து அவர்களது சொந்த வயலில் விவசாயம் செய்து வந்தனர். கள்ளப் பெரம்பூர் ஓட வாய்க்கால் அருகே உள்ள வயலுக்கு தம்பதியினர் இருவரும் சேர்ந்து சென்றுள்ளனர்.
இருவரும் தினமும் வயலுக்கு சென்று கலை பறிப்பது, பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை செய்து வருவது வழக்கம். இவர்களது வயலை சுற்றி கம்பி வேலி அமைத்திருந்தனர். இந்த நிலையில் வழக்கம் போல வயலுக்கு சென்ற தம்பதியினர் இரும்பு வேலி மீது மின் கம்பி அறுந்து விழுந்ததை கவனிக்காமல் சுப்ரமணியனும் ராமாயியும் சேர்ந்து இரும்பு வேலியை தொட்டனர்.
அப்போது அவர்கள் மீது அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தம்பதியினரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மின்கம்பி அறுந்து வேலி மீது விழுந்திருக்கலாம் எனவும், அதனை தம்பதியினர் கவனிக்காமல் தொட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
