மத்தியப் பிரதேசத்தில் கள்ளக்காதல் விவகாரமும், அதனை ஊருக்குள் அம்பலப்படுத்திய அவமானமும் ஒரு குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் குவாலியயை சேர்ந்தவர் மம்தா யாதவ் (32). இவருக்கு ராம்ஹெட் யாதவ் என்பவருடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராம்ஹெட் பழக்கடையில் கூலி வேலை செய்து வருகிறார்.

அதே பகுதியில் வசிக்கும் சுரேந்திர யாதவ் என்பவருடன் மம்தாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். அந்த உரையாடல்களைச் சுரேந்திர தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்து வைத்துள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த ஆடியோ பதிவுகள் சுரேந்திராவின் மனைவியான ரேகா யாதவின் கைகளில் கிடைத்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை அன்று ஆத்திரமடைந்த ரேகா, வீட்டின் வெளியே மியூசிக் சிஸ்டத்தை வைத்து மம்தாவும் சுரேந்திராவும் பேசிய ஆடியோவை ஒட்டுமொத்த மொட்டைமாடி மற்றும் தெரு மக்களுக்குக் கேட்கும் வகையில் சத்தமாகப் போட்டுக் காட்டியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த மம்தா, யாரிடமும் பேசாமல் மன உளைச்சலுக்கு ஆளானார். அன்றைய தினம் வேலை முடிந்து கணவன் ராம்ஹெட் வீடு திரும்பியபோது, மம்தா மயங்கிக்கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். அருகில் விஷ பாட்டில் கிடந்ததைக் கண்ட அவர், உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை காலை மம்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது மனைவியின் சாவுக்குப் பக்கத்து வீட்டுக்காரரான சுரேந்திர யாதவ், அவரது மனைவி ரேகா, ராஜ்பால் யாதவ் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த சிலரே காரணம் என்றும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் மம்தாவைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கணவர் ராம்ஹெட் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்கள் மற்றும் ஆடியோ பதிவுகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.