உத்தரப்பிரதேசத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கலந்துகொண்ட திருவிழா ஊர்வலத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான மற்றும் கலகலப்பான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது உத்தரப்பிரதேச மாநிலம் அக்பர்பூர் மக்களவைத் தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான தேவேந்திர சிங் போலே, பிரம்மாண்டமான முறையில் ஒரு  ஊர்வலத்தை நடத்தினார். கான்பூர் நகரில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், நூற்றுக்கும் அதிகமான வாகனங்களும் கலந்துகொண்டனர். வாகனங்கள் அனைத்தும் வண்ணமயமான கொடிகளால் அலங்கரிக்கப்பட, எம்பி தேவேந்திர சிங் போலே திறந்த தார்  வாகனத்தில் நின்றுகொண்டு ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஊர்வலம் ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைந்தபோது, எம்பியை மிக அருகில் சென்று வாழ்த்துவதிலும், மாலை அணிவிப்பதிலும் தொண்டர்கள் அதீத ஆர்வம் காட்டினர். அந்த உற்சாக மிகுதியில் சில இளைஞர்கள் எம்பி அமர்ந்திருந்த திறந்த தார் வாகனத்தின் போனெட்டின் மீது திடீரென ஏறி நின்றனர். வாகனத்தின் நிலைப்பாட்டைக் குலைக்கும் வகையில் தொண்டர்கள் மேலே ஏறுவதைக் கண்ட எம்பி, அவர்களை அன்போடு கீழே இறங்குமாறு சைகை செய்தார்.

தொண்டர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காததால், எம்பி தேவேந்திர சிங் போலே தன் கை கூப்பி அவர்களைக் கீழே இறங்குமாறு கனிவோடு வேண்டினார். அப்போது அவர் நகைச்சுவையான பாணியில், “அட மச்சான்களே, காரில் இருந்து கீழே இறங்குங்கள், கார் உடைந்துவிடும். ஒருவேளை கார் உடைந்துவிட்டால் அதைச் சரிசெய்ய என்னிடம் காசு இல்லை!” என்று சிரித்தபடியே கூறினார்.

அவர் கலகலப்பாகக் கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் தொண்டர்கள் உடனடியாக வாகனத்தின் மீதிருந்து கீழே இறங்கினர். அதன் பிறகு ஊர்வலம் எந்தத் தடையுமின்றித் தொடர்ந்தது. தற்போது இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பலரையும் புன்னகைக்க வைத்துள்ளது.