ஜெர்மனியில் தங்கி வேலை செய்ய விரும்பும் நபர்களுக்கு அந்நாட்டு அரசு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. குடியிருப்புச் சட்டத்தின் பிரிவு 21(5) இன் கீழ் வழங்கப்பட்டு வரும் ‘ஜெர்மனி ஃப்ரீலான்ஸ் விசா’ மூலம், வெறும் 7,500 ரூபாய் கட்டணத்தில் ஒரு வருடம் வரை அங்கு தங்கிப் பணியாற்ற முடியும். மேலும் இந்த விசா வைத்திருப்பவர்கள், தங்கள் மனைவி மற்றும் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் கூடவே அழைத்துச் செல்ல முடியும்.
இந்த விசா திட்டம் முதன்மையாகப் பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விசாவைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது துறை சார்ந்த கல்விச் சான்றிதழ்கள், தொழில்முறை அனுபவம், செல்லுபடியாகும் சுகாதாரக் காப்பீடு மற்றும் போதிய நிதி ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
நிதி ஆதாரமாகத் தங்களது கணக்கில் குறைந்தபட்சம் மாதம் தோறும் சுமார் 1,280 யூரோக்கள் (தோராயமாக ரூ. 1.27 லட்சம்) வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், 10 ஆண்டுகளுக்குள் பெறப்பட்ட பாஸ்போர்ட், வணிகத் தொடர்புகளுக்கான சான்றுகள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் ஓய்வூதியம் சார்ந்த ஆவணங்கள் ஆகியவை இந்த விண்ணப்பத்திற்குத் தேவைப்படும் முக்கிய ஆவணங்கள் ஆகும்.
இந்தியர்கள் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க, முதலில் இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் நேரில் சென்று சந்திப்பதற்கான நேரத்தை (Appointment) முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் உரிய ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களைச் சமர்ப்பித்து ‘தேசிய D விசா’ பெற வேண்டும். இந்த விசா ஒப்புதலளிக்கப்பட்ட பின், 3 முதல் 6 மாதங்களுக்குள் ஜெர்மனிக்குச் சென்று தங்களது பணியைத் தொடங்கலாம்.
