திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த  பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (26). பொறியியல் பட்டதாரியான இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும்,  அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த இருவீட்டு பெற்றோரும் இவர்களின் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்திருந்தனர். எனினும், சில காரணங்களால் இவர்களது திருமணம் தொடர்ந்து தாமதமாகி வந்ததால், தீபக் கடந்த சில நாட்களாகவே கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காதலியின் அலுவலகத்திற்குச் சென்ற தீபக், அவரை அழைத்துக் கொண்டு காதலியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தீபக், படுக்கையறைக்குள் சென்று காதலியின் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து அறைக்குள் சென்று பார்த்த காதலி, தீபக் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீபக்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்