அமெரிக்காவில் , தெலுங்கானாவைச் சேர்ந்த 28 வயதான அன்ஷுல் குன்சா என்ற இந்திய வாலிபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் பி.டெக் முடித்துவிட்டு, குடும்பத்தினரின் ஆதரவோடு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற அன்ஷுல், அங்கு முதுகலைப் படிப்பை நிறைவு செய்துவிட்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அத்துடன், கூடுதல் வருமானத்திற்காக வார இறுதி நாட்களில் பீட்சா விநியோகப் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த இரவு ஆளில்லாத ஒரு பகுதிக்கு வந்த போலி ஆர்டரை ஏற்றுக்கொண்டு அன்ஷுல் பீட்சா டெலிவரி செய்யச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் அன்ஷுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்ஷுலிடமிருந்து பணம் அல்லது பொருட்கள் எதுவும் கொள்ளையடிக்கப்படாததால், இந்த கொடூரக் கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அமெரிக்கப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, உயிரிழந்த அன்ஷுலின் உடலை விரைவாக இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது சகோதரி தன்வி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “அன்ஷுல் குன்சாவின் மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது; அவரது குடும்பத்தினருடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், உடலை தாயகம் கொண்டு சேர்க்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.